Tuesday 2nd of June 2026

English Tamil
Advertiesment


கர்தினாலின் அறிக்கையால் ஆட்டம் கண்டது அரசாங்கம்


2019-11-01 14862

அமெரிக்க ஒப்பந்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவை


சர்வஜன வாக்கெடுப்பின்றி அமெரிக்காவுடனான மில்லேனியம் சவால் ஒப்பந்தத்தை செய்துகொண்டால் நாட்டில் மிகவும் பயங்கரமான பிரதிபலனே ஏற்படும் என்று கர்திகால் மெல்கம் ரங்ஜித் ஆண்டகை எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இந்த ஒப்பந்தத்தை செய்துகொள்ள வேண்டும் என்றால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் இது நிறைவேற்றப்பட வேண்டும் என்பதோடு அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கருத்துக் கணிப்பிற்கும் விடப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.


அமெரிக்காவுடனான மில்லேனியம் சவால் என்கிற ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெயரளவில் அளித்திருக்கின்ற நிலையில், அந்த ஒப்பந்தத்தை அவசரமாக ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் செய்துகொள்ள தயாராகி வருவதாக நேற்றைய தினம் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


இதனைத் தொடர்ந்து மஹிந்தவாதி நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, அத்துரலியே ரத்தன தேரர் ஆகியோர் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து இந்த ஒப்பந்தத்தை தடுத்து நிறுத்துமாறு கோரினர்.


இதற்கமைய ஒப்பந்தம் தடுத்து நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.


இந்த நிலையில் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச இதுகுறித்து கடுமையான தனது எதிர்ப்பினை அறிக்கை ஊடாக வெளியிட்டிருந்தார்.


இதேவேளை கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையும் இன்றைய தினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு தனது கண்டனத்தையும் அரசாங்கத்திற்கு வெளியிட்டுள்ளார்.


ஜனாதிபதி தேர்தலுக்காக முழு நாடுமே தற்போது தயாராகி வருகின்ற நிலையில் இவ்வாறு ஒப்பந்தமொன்றை அவசர அவசரமாக செய்துகொள்வது எந்தவிதத்திலும் தகுதியற்ற செயற்பாடாகும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த மே 31ஆம் திகதி நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின்போதும் பொதுமக்களது வாக்கெடுப்பின்றி இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளக்கூடாது என்பதையே மகாநாயக்க தேரர்களும் வலியுறுத்தியிருந்ததாக கர்தினால் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதற்கமைய நாடாளுமன்றத்தில் இந்த ஒப்பந்தம் குறித்த அனுமதியும் இதுவரை பெற்றுக்கொள்ளப்படவில்லை என்பதை தனது அறிக்கையில் கர்திகால் ரஞ்ஜித் ஆண்டகை நினைவுப்படுத்தியுள்ளார்.

Advertiesment